பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சிவி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பி.க்கள் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ மற்றும் எம்.பி. உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்யுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி. ராஜேந்திரனுக்கு கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் உடனே மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்வ் என முடிவு வந்துள்ளது. 

பின்னர், உடனே எம்எல்ஏ சிவி ராஜேந்திரன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட சிவி. ராஜேந்திரன் ஊரடங்கு காலங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.