கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் வரும் ஜீன் மாதம்  கொரோனா 4 வது அலை வர வாய்ப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.  

 அதிகரிக்கும் கொரோனா ?

கடந்த 3 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகுந்த ஒரு பாதிப்பை சந்தித்துள்ளனர். சொந்தங்களை இழந்தும், வேலை இழந்தும் வாழ வழியின்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தான் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உதவி புரிந்தது. இதனால் உயிர் இழப்பு பெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்டகொரோனா 3 ஆம் அலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத நிலை உருவானது. இந்த நிலையில் சீனா, தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசுகள் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையிலை இந்தியாவில் பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 37 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனையடுத்து தங்களது இயல்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி பட்ட நிலையில் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியானது தற்போது வெளியாகியுள்ளது.


ஜீன் மாதத்தில் 4 வது அலை?

கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக மக்களை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,கொரோனா இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என கூறினார். அருகில் உள்ள மாநிலமாக கேரளாவிலும் கொரோனா தீவிரமாக உள்ளதாகவும், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாட்டிலும் கொரோனா தீவிரமாக அதிகரித்து வருவதாக கூறினார். எனவே கொரோனா வைரஸ் தீவிரம் இன்னமும் குறையவில்லையென தெரிவித்தார். தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் லட்சகணக்கானோர் இன்னமும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் தான் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்த அவர், கடந்த ஒரு வாரமாகவே மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கான்பூர் ஐஐடி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுக்கள் ஜீன் மாதத்தில் கொரோனா 4 வது அலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் கவனமோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தடுப்பூசி தான் ஒரே ஆயுதம்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி தான் ஒரே வழி என கூறியவர், இதற்காக தடுப்பூசி முகாம் நடத்தி வருவதாக தெரிவித்தார். உள்ளாட்சி பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்பு ஜீன் மாதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மாநில அரசுகளை அலர்ட் செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.