கொரோனா இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பதை ஒத்திவைக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு அட்வைஸ் கூறியுள்ளது. 

ஐகோர்ட் மதுரை கிளையில், தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராம்பிரசாத் தாக்கல் செய்த மனுவில்... "கொரோனா வைரஸ் பரவலால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. உலகளவிலான பாதிப்பில் இந்தியா 2வது இடத்தை பெற்றுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். சுமார் 11 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இதனிடையே சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவும் சூழல் உள்ளது. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. ஆனால், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை நவம்பர் 16 முதல் திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் சினிமா தியேட்டர்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுவர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே வீணாகும். பள்ளி, கல்லூரிகளில் போதுமான அளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. பல ஊர்களில் உள்ள மாணவர்கள், வெவ்வேறு மாவட்டங்களில் படிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான அளவுக்கு போக்குவரத்து வசதி இல்லை.

 தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் அரசின் இலவச பஸ் பாஸைத்தான் பயன்படுத்துகின்றனர்.  தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால், உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நேரத்தில் பள்ளிகளைத் திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதை தவிர்க்க, உடனடியாக பள்ளிகளை திறக்கும் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், எட்டு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இவ்வளவு நாள் பொறுத்திருந்த தமிழக அரசு டிசம்பர் இறுதி வரை பொறுக்கலாமே? அதுவரை பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்கலாம். அதன்பிறகு திறப்பது குறித்து முடிவெடுக்கலாமே? ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம். தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கலாமே? இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது’’ என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில், ‘‘பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டது. இதில், அதிகளவிலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை திறக்கத் தேவையில்லை என கூறியுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் ஒரு சில நாடுகள் ஈடுபட்டுள்ளன. இவ்வளவு நாள் பொறுத்திருந்த நாம், இன்னும் சில காலம் பொறுத்திருக்கலாம். பள்ளி திறக்கும் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்’’.