ஆண்டவனே நினைத்தாலும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  சர்ச்சை என்றால் செல்லூர் ராஜூ செல்லூர் ராஜூ என்றால் சர்ச்சை என்று இருந்து வரும் நிலையில் , அவர் மீண்டும் இவ்வாறு பேசியுள்ளார்.   அதுவும் சட்டமன்றத்தில்  அவர் இப்படி  பேசியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.  

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட திமுக உறுப்பினர் கு. பிச்சாண்டி  வெங்காய விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெங்காயம் அழுகியதால் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன்  விலை உயர்ந்தது என்றார் .  வெங்காயத்திற்கு நிரந்தர விலை நிர்ணயிக்க முடியாது என்ற அவர்.   அது 90 நாட்கள் மட்டுமே விளையக்கூடிய பொருள் என்றார்.  தற்போது படிப்படியாக வெங்காயத்தின் விலை குறைந்து வருவதாக அவர் கூறினார் .  அதைத் தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ,  

திமுக ஆட்சிக்காலத்தில் விலை ஏற்றம் குறித்து கேட்டதற்கு பொருளாதார வளர்ச்சி காரணமாக விலைவாசி உயர்கிறது  என அப்போதைய அமைச்சர்கள் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.  அதேபோல்தான் இப்போதும் அனைத்து ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வு இருக்கத்தானே செய்யும் என்றார் .  விலைவாசி உயர்வு என்பதை அந்த ஆண்டவனே வந்தாலும் கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு அப்போது கூறினார் . அவர்  சட்டமன்றத்தில் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது எதிர்க்கட்சிகளை மட்டும் அல்ல  பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .