டி.டி.வி. தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதில் மாபெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கிய அவர் குக்கர் சின்னத்தையே தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார். 

இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நிரந்தரமாக தங்களுக்கு குக்கர் சிக்கத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது தெரிவித்திருந்தது. பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியது.

 

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது. டெல்லியில் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை 4 வாரத்தில் முடிக்க வேண்டும். அப்படி 4 வாரத்திற்குள் நீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால், தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனால் டிடிவி தினகரனுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டாலும், தேர்தல் ஆணையம் மனது வைத்தால் மீண்டும் டி.டி.விக்கு குக்கர் சின்னம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 18 எம்எல்ஏ வழக்கு, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு, குக்கர் சின்னம் உள்ளிட்ட வழக்குகளில் தினகரன் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறார்.