அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு, பொதுவான குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில் மூழ்கும் கப்பல் போல் இருந்த தினகரனை உச்சநீதிமன்றத்தில் தூக்கி நிறுத்தியவர் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 59 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக, பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்கிட வேண்டுமென்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், இரட்டை இலை வழக்கின்போது, இடைக்கால நிவாரணமாக எங்களுக்குக் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அப்போது அவர்கள் உறுதி அளித்தபடி குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக, எதிர்வரும் மக்களவை, சட்டமன்றத் தேர்தலிலும் ஒதுக்கிட வேண்டும் என வாதிட்டார்.  

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்படாத கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் ஒரு கட்சியைப் பதிவுசெய்ய மாதக் கணக்காகிவிடும். அதற்கு இப்போது நேரமில்லை. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கலுக்கான கால அவகாசம் முடிகிறது. அதற்குள் எங்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டால்தான், வேட்பாளர்கள் அச்சின்னத்தில் போட்டியிட முடியும்’’ என்றார். இதனையடுத்து கபில்சிபிலின் பதிலில் திருப்தியடையாத தலைமை நீதிபதி அவரது வாதத்தை ஒதுக்கினார்.

 

பின்னர் தினகரன் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி 59 வேட்பாளர்களுக்கும் தனித்தனி சின்னத்தில் போட்டியிடுவது என்பது இயலாத காரியம். ஆகையால் குக்கர் இல்லை என்றால் அனைத்து வேட்பாளருக்கும் பொதுவாக வேறு ஒரு சின்னத்தை நீதிமன்றம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பிறகு இந்த வழக்கின் போக்கு திசைமாறியது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர்ப்புகளை மீறி தினகரன் தரப்பு வேட்பாளர்களுக்கு பொதுச்சின்ன பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை பொதுச்சின்னமாக 59 தொகுதிகளிலும் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில், சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தினகரனின் அ.ம.மு.க ஒரு கட்சியாக அங்கீகரிக்கவில்லை எனத் தீர்ப்பளித்தார். குக்கர் இல்லை என்றாலும் தினகரனுக்கு பொதுவான சின்னம் என்பது மகிழ்ச்சியான செய்திதான் என்பதால் வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.