இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகரிடம் டிடிவி தினகரன் 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக டிடிவி தினகரன் பேசிய தொலைப்பேசி உரையாடல் சிக்கியுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் உச்ச கட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. அதுவும் அதிமுகவில் சொல்லவே தேவையில்லை. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டு பல புகார்களில் சிக்கி வருகின்றனர்.

சசிகலா கைது, முதல்வர் பதவிக்கு போட்டி, பன்னீர்செல்வத்தின் போர்க்கொடி, தொண்டர்களின் ஆவேசம், இரட்டை இலை சின்னம் முடக்கம், வருமான வரித்துறையின் அதிரடி சோதனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அமைச்சர்கள் மத்தியில் குழப்பம், மகாதேவன் மரணம், தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் லஞ்சம், டெல்லி போலீசார் தமிழ்நாடு வருகை என அதிமுகவில் சுவாரசியங்கள் நீண்டு கொண்டே போகிறது.

இன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.

 இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை எனவும், யாரிடமும் பணம் கொடுக்கவிலலை எனவும் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா இதற்கு முன்னர் பல பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.