பெண்களை இழிவாக பேசியதற்காக ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக, ஆ.ராசாவை ஏன் நீக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் பழனிசாமி குறித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து,  முதல்வர் குறித்து கூறிய கருத்துக்காக மனம் திறந்து மன்னிப்பு கேட்பதாக ஆ.ராசா தெரிவித்தார்.

இந்நிலையில், மூலக்கொத்தளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசியது திமுகவுக்கு எதிராக திரும்பியிருப்பதால்தான் இன்றைக்கு உடனடியாகத் தன் பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்கின்றார். அவர்கள் கட்சியில் எல்லோரும் அப்படித்தான். நிலச்சுவான்தாரர், பண்ணையார், ஜமீன்தார் போன்றுதான் அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். மக்கள் அரசியலை திமுக செய்யவில்லை.

ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால்தான் திமுக மீது மக்களுக்கு நல்ல கருத்து இருக்கும். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திமுக சொல்லித்தான் ஆ.ராசா பேசினார் என்ற கருத்து இருக்கும். தான் பேசியதைத் திரித்து சமூக வலைதளங்களில் உலாவிட்டிருந்தால் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லையே? என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.