கோஷ்டி சண்டையில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.தான் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட முன்னால் நிற்கிறது! இதை அடிக்கடி நிகழும் சம்பவங்களை மேற்கோள்காட்டி நாமும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். இந்நிலையில், சமீபத்திய மோதல் ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கப்பட்டதாக ஒரு தகவல் வெடித்தது. அதை சிலர் மறுக்க, சிலரோ ‘வீடியோ ஆதாரமே இருக்குது!’ என்று விரல் சொடுக்க, தொடருது வில்லங்க விவாதம். 
என்ன நடந்தது?...

உள்ளாட்சி துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி மீது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு ஏக கடுப்பு. காரணம்? ஓட்டபிடாரம் மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டிருக்கும் வேலுமணி அடிக்கடி தூத்துக்குடிக்கு வந்து பணிகளை விரைவு படுத்துகிறார். அவரது அதிரடியானது சில நேரங்களில் லோக்கல்  அமைச்சரான கடம்பூராருக்கு சிக்கலாகிறது. 

சமீபத்தில் ‘விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கிளை கழக செயலாளர்களுக்கு இருபத்தைந்தாயிரம் வீதம் பணப்பட்டுவாடா செஞ்சுடுங்க.’ என்று கூற அதற்கு கடம்பூராரோ ‘என்கிட்ட இப்போ பணமில்லை’ என்றாராம். உடனே அவரது எதிர்கோஷ்டியான மார்க்கண்டேயனோ ‘நான் அம்பதாயிரம் ரூபாய் கூட கொடுக்கிறேன். ஆனா சீட் எனக்குதான்னு உறுதி கொடுங்க தலைவரே!’ என்று வேலுமணியிடம் வழிய, காட்டமாகிவிட்டார் கடம்பூரார். இவர் தடுக்க, உடனே வேலுமணியோ ‘நீங்களும் கொடுக்க மாட்டேங்கிறீங்க, கொடுக்கிறவரையும் ஏன் தடுக்குறீங்க? இப்டி இருந்தா எப்படி தேர்தல் வேலை பார்க்க, எப்படி ஜெயிக்க?’ என்று பொங்கிவிட்டாராம். 

இந்நிலையில் சமீபத்தில் விளாத்திகுளம் தொகுதியில் புதூர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்திருக்கிறது. அங்கே அமைச்சர் கடம்பூராருக்கு எதிரான கோஷ்டியின் கை வலுவாக இருக்கிறது. கூட்டம் துவங்கியதும் அமைச்சர் ராஜூ பேச துவங்கியுள்ளார். உடனே அவரை ஒருமையில் பேசி, ‘மார்க்கண்டேயனை பேசவிடு’ என்று கத்தியிருக்கிறார்கள். இதற்கு அமைச்சர் தரப்பு எகிற, வாக்குவாதமாகி, கைகலப்பாகிவிட்டது. இந்த சம்பவத்தின் போதுதான் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும்  இரண்டு அடி விழுந்துவிட்டது என்கிறார்கள். நிலவரம் கலவரமானதும் அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் அவரை அழைத்து சென்றுவிட்டனர். 

இந்நிலையில் இந்த களேபரம் சென்னை வரை புகாராகியிருக்கிறது. சொந்தக்கட்சி நபர்களிடமே தான் அடிபட்டதாக தகவல் வந்தால்  பெயர் அசிங்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் கடம்பூரார் அந்த புகாரை தவிர்க்கிறாராம், இந்த விவாதத்தை இப்படியே விட்டுவிட முயல்கிறாராம். ஆனால் எதிர்தரப்போ ‘கைகலப்பில் அமைச்சர் மேலேயும் அடி விழுந்துது. எங்ககிட்ட மொபைல் வீடியோ ஆதாரமே இருக்குல்லா!’ என்று வாலண்டியராக வம்பிழுக்கிறார்களாம். அமைச்சரை அடித்தார்கள் என்று சொல்லி தங்கள் அணியில் சிலர் மீது வழக்கு பாய்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் எப்படியாவது அமைச்சரை அசிங்கப்படுத்த துடிக்கிறார்களாம்.

கஷ்டகாலம்தான் கடம்பூராருக்கு!