தமிழக அரசு காண்ட்டிராக்டரான  செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்துக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத 170 கோடி ரூபாய் பணமும் 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணத்தை இயந்திரங்கள் மூலம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும், தங்கத்தை துல்லியமாக எடைபோட முடியாமல் அதிகாரிகள் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை  என்பவர்  அரசு முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வருகிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும்  எடுத்து செய்து வருகிறார். 

இந்நிலையில், பாலையம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.  16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் உள்ள செய்யாதுரையின் வீடு, அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது. மேலும்   சென்னை, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட செய்யாதுரையின்  உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை  சோதனைகள் இன்று நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும்  கட்டுக்கட்டாக ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்யாதுரை வீட்டில் இருந்து கைப்பற்ற பணம் இயந்திரங்கள் கொண்டு எண்ணப்பட்டு வருவதாகவும், கட்டி கட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளை துல்லியமாக எடைபோட முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.