வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவின் தொடர் பாய்ச்சல்களால் நிலைகுலைந்து போயிருக்கிறது திமுக. ‘அடுத்த ரெய்டு நம்ம வீட்டிலா!’ என்கிற அச்சத்தில் பல திமுக தலைவர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான இடங்களில் எம்.பி தேர்தல் சமயத்திலும், அதன் பின்னரும் வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தின. இந்த சோதனைகளில் கணக்கில் வராத ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் முறைகேடான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்தது. பல கோடி ரூபாய் பெறுமதியான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதேபோல முறைகேடான வெளிநாட்டு முதலீடு குற்றச்சாட்டிற்கு ஆளான திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடியின் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களையும் அமலாக்க பிரிவு முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மத்திய அமைப்புகளின் இந்த அதிரடி நடவடிக்கைகள் திமுக பிரமுகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றன. நேரிலும், ரகசிய செல்போன் உரையாடல்களிலும் இது பற்றித்தான் இவர்கள் பேசிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ’அடுத்த ரெய்டு யார் வீட்டில்?’என்பதுதான் இவர்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

முக்கிய பிரமுகர்களிடையே நிலவும் இந்த பீதி திமுக தலைவர் ஸ்டாலினையும் விட்டுவைக்கவில்லை. ஆடிப்போன அவர், தனது மருமகன் சபரீசன் மூலம் டெல்லியில் சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை டெல்லியில் சந்தித்த சபரீசன், சீற்றத்தைத் தணித்துக்கொள்ளுமாறு மன்றாடியிருக்கிறார். ஆனால் டெல்லி தலைவர்கள் பிடி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக டெல்லி அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, ’’திமுகவினர் மீதான பாய்ச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு தமிழக சட்டசபை தேர்தல் முடிந்ததும், எங்கள் அரசியல் அணுகுமுறைகளை அடியோடு மாற்றிக் கொள்கிறோம். மத்திய அரசுடனும், பாஜகவுடனும் நல்லுறவு தொடரும்’’ என பாலு அளித்த உறுதிமொழிக்கு எதிர் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் அடுத்து என்ன செய்வது, பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்கிற தவிப்பில் இருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.