ரஜினியின் அரசியல் பிரவேச முழுக்கு பலரையும் கோபப்படுத்தி உள்ளது. விமர்சிக்க வைத்துள்ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளரான கரடற்கரய் மத்தவிலாச அங்கதம் தனது முகநூல் பக்கத்தில் ரஜினியை பற்றி விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது. 

அந்தப்பதிவில், அன்புள்ள ரஜினிகாந்த்! அப்படி உங்களை அழைக்கலாம் என்றே நினைக்கிறேன். உங்களை எனக்கு நிறையப் பிடிக்கும். சின்ன வயதில் எனது வலது கையில் செப்புக் காப்பு அணிந்து கொண்டு உங்களைப் போல் திருநீறு பூசிக்கொண்டு திரிந்தவன் நான். ஏறக்குறைய உங்களது வீரா படத்தை எத்தனை முறை திரையில் பார்த்திருப்பேன் என்ற கணக்கு என் கைவசம் இல்லை.

 

அதே போல தான் அண்ணாமலை. இந்தப் பட்டியலில் படையப்பாவையும் எஜமானையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘வீரா’ படத்தில் ஒலித்த ‘கொஞ்சிக் கொஞ்சி அலைகளோட’ என்ற பாடலை காலையில் வானொலியில் கேட்காதவர்கள் இருக்கவே முடியாது. கேசட் தேயும் வரை அனுதினமும் வானொலி அந்தப் பாட்டை போட்டுப் போட்டு ஒலி பரப்பியது ஒரு காலம். உங்களின் ‘முத்து’ படத்தை பாண்டிச்சேரி பாலாஜி 70எம்.எம் தியேட்டரில் தினமும் செகண்ட் ஷோ பார்க்காமல் நான் தூங்கப் போனதே இல்லை. அந்தப் படம் அந்தத் திரையரங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்தளவுக்கு உங்கள் மீது ஒரு ப்ரியம். இப்போது கூட ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ பாடலைக் கேட்காமல் நான் படுக்கச் சென்றதே கிடையாது. 

நீங்கள் அதிகம் விரும்பும் ‘பாட்ஷா’ படத்தை இந்தப் பட்டியலில் சொல்லாமல் போனால் குற்றமாகிவிடும். இங்கே படங்களின் பட்டியல் முக்கியம் அல்ல. உங்களின் மனம்தான் முக்கியம். அதை குறித்தே நான் பேச விழைகிறேன். எனக்கு விவரம் அறிந்து நான் உங்களை விரும்பத் தொடங்கிய காலத்திலிருந்து உங்களைக் கவனித்து வருகிறேன். நீங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவுத் தெரிவித்த போதுகூட ‘அண்ணாமலை சைக்கிள்’ சின்னத்தோடு வீடுவீடாகப் போய் ஓட்டுக் கேட்டும் இருக்கிறேன். அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதை நீட்டி எழுதத் தேவையில்லை. அனைவரும் அறிவர்.

 ‘இனி ஆண்டவனால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது’ என நீங்கள் பேசிய பேச்சு வலைத்தளங்கள் இல்லாத காலத்திலேயே வைரலானது. அன்றைக்கு உங்களின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தூர்தர்ஷனின் நீங்கள் அளித்த பேட்டி கூட பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு நீங்கள் செல்வாக்கு மிக்கவர்தான் அன்று. ஆனால் இன்றைக்கு அந்தச் செல்வாக்கு உள்ளதா என்பது கேள்வி.இந்தக் கதையெல்லாம் இப்போது ஏன் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. அன்று நான் உங்களின் ரசிகன். இன்று நான் கொஞ்சம் அரசியல் விழிப்புணர்வு உள்ளவனாக மாறி இருக்கிறேன். உங்கள் முடிவுகளிலிருந்து நான் வெகுதூரம் நகர்ந்து வந்துள்ளேன். அதற்குக் காரணம் எனது சிந்தனை வளர்ச்சி. 

ஆனால் இந்த 30 ஆண்டுகளாக நீங்கள் கொஞ்சமும் மாறாமல் ஒரே புள்ளியில்தான் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். ‘ஆண்டவன் சொல்வான்’ என்பதைத் தவிர உங்களிடம் வேறு பதில் இல்லை. உங்களின் குழப்பங்களுக்கு எல்லாம் நீங்கள் ஆண்டவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு ஊடகவாதியாக ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு வார பத்திரிகையில் பணியாற்றிய போது ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என ஊர் ஊராகப் போய் சர்வே நடத்தினோம். அந்த சர்வே என் அறிவுக்கு எட்டியவரை மிக நியாயமாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊர்த் தெருக்களில் வாகனத்தை நிறுத்து நிறைய சேம்பிள் எடுத்தோம். அங்கே வாக்களிக்கக் குவிந்த அனைத்து இளைஞர்களும் புதிய தலைமுறை நடிகர்களான அஜித் மற்றும் விஜய்க்குதான் வாக்களித்தனர். பத்து சீட்டை நீட்டினால் அதில் சரிசமமாக இந்த இரு நடிகர்களுக்குள்தான் போட்டி இருந்தது. உண்மையில் உங்கள் செல்வாக்கின் சரிவைக் கண்கூடாகப் பல ஆண்டுகள் முன்பே நான் நேரடியாக இந்த சர்வேயில் கண்டிருக்கிறேன்.

நீங்கள் சொல்லலாம். அன்றைய நிலை வேறு, இன்றைய நிலை வேறு. நிலைமை மாறி உள்ளது என்று. உண்மையில் அப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கக் கூடும். ஆனால் அதற்கான புள்ளிவிவரங்கள் என்னிடமோ அல்லது உங்களிடமோ அறிவியல்பூர்வமாக இல்லை. எனவே அதைப்பற்றி விவாதிப்பது வீண். நான் சொல்லவது ஒன்றைத்தான். நீங்கள் ‘சிஸ்டம் கெட்டுவிட்டது’ என்றீர்கள். அந்த சிஸ்டம் கெடும் போது அதன் ஒரு பகுதியாக நீங்கள் மக்கள் செல்வாக்கை வைத்துக் கொண்டு வாய்மூடி மௌனியாகவே இருந்தீர்கள். ஆக, இந்த சிஸ்டத்தை சரி செய்ய நீங்கள் 96 க்குப் பிறகு பெரிய முயற்சிகளை எடுக்கவே இல்லை. குறிப்பாக இரண்டு தலைமைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதால் உங்களின் அரசியல் மீசைக்கு லேசாக கருப்புச் சாயம் பூசலாம் எனக் கணக்குப் போட்டீர்கள். அவ்வளவுதான். அதற்குத்தான் இத்தனை நாடகம்.

நீங்கள் நல்லவர்தான். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அரசியல் என்பது என்ன? மயானத்திற்குப் போகும் வரை மக்களைப் பற்றிச் சிந்திப்பது. பொதுநலம் ஒன்றே தன் நலம் என்று நினைப்பது. முதலில் என் உயிர் போனாலும் பரவாயில்லை என்றீர்கள். இப்போது என் உயிருக்கு ஆபத்து எனவே வர மாட்டேன் என்கிறீர்கள். ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?

அரசியலில் உள்ள அனைத்து தலைவர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து கொண்டா அரசியல் செய்தார்கள். காந்தி, தன் கை தடியை எடுத்துக் கொண்டு தண்டி யாத்திரைக்குப் புறப்பட்ட போது அவர் உடல்நிலை எப்படி இருந்தது என்பதை அறிவீர்களா? அவரது ரத்தக் கொதிப்பு 200 தாண்டிப் போனபோது கூட அவர் ஓய்வை விரும்பியதில்லை என்பதை அறிவீர்களா? கைத் துப்பாக்கியுடன் ஒருவன் தன் உயிரைப் பறிக்க வெளியே காத்திருக்கிறான் என்பதை அறிந்தும் கூட அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார் என்பதை உங்களால் என்றாவது புரிந்து கொள்ள முடிந்திருக்கிறதா? இல்லையே?

போர் போர் என்றீர்கள் கடைசியில் என்ன ஆனது? மன்னிப்பு கேட்கிறீர்கள். அன்புள்ள ரஜினி, உங்கள் உடல்நிலை முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் நாம் அளிக்கும் வாக்கு. காந்தி சொன்னார், ஒரு சொல்லை மக்களிடம் அளித்துவிட்டால் அந்த வாக்குக்காகச் செத்துவிட வேண்டும் என்று. ‘செய் அல்லது செத்து மடி’ என அவர் பேசிய பேச்சை உங்கள் அருமை நண்பர் தமிழருவியைக் கேளுங்கள், என்னைவிடச் சிறப்பாகச் சொல்வார். தன் வாழ்நாள்  முழுக்க மூத்திரப் பையைச் சுமந்து கொண்டு திரிந்தாரே அந்தப் பெரியாரைப் போய் கேளுங்கள். அவரது இறுதிப் பேச்சை ஒரு முறையேயும் உங்களின் வாழ்நாளில் கேட்டுப் பாருங்கள். ஈரக்குலை நடுங்க ரத்த வாந்தி எடுத்தார் மேடைகளில். யாருக்காக? தன் சூத்திரன் பட்டம் ஒழிய வேண்டும் என்பதற்காக. ஆனால் நீங்கள் உடல்நிலை சரியில்லை என்கிறீர்கள்.

அய்யா ரஜினி அவர்களே! அண்ணாவைத் தெரியுமா உங்களுக்கு. அவருக்கு இருந்த கொடிய நோய் பற்றித் தெரியுமா உங்களுக்கு? தான் மரணக்கட்டிலில் இருக்கிறேன் என்பதை அறிந்தும் கூட அண்ணா, கலைவாணர் சிலையைத் திறப்பதற்காக வந்தார். மருத்துவர்கள் மரண தேவன் வந்துவிட்டான் எனச் சொன்னதைப் பொருட்படுத்தாமல் சிலைத் திறப்பில் கலந்து கொண்ட அண்ணா, அடுத்த 15 நாட்களில் மரணத்தைத் தழுவினார். வியாதியால் அவர் முடங்கிப் போகவில்லை.

அன்புள்ள ரஜினிகாந்த் சார் இதுதான் அரசியல். இதுதான் மக்கள் சேவை. தனக்கு ஒரு துயரம் எனில் கூட மக்கள் நலன் மீது மரியாதைக் கொள்பவன் தான் வரலாற்றில் தலைவன் ஆகிறான். நீங்கள் ஓடி ஒளிவதிலிருந்தே தெரிகிறது உங்களுக்குத் தலைவன் ஆகும் தைரியம் இல்லை என்பது. நீங்கள் இனிமேல் இந்தச் சவடால்களை முதலில் நிறுத்துங்கள். நிம்மதியாக ஒரு கிருகஸ்தனாக வாழ்வைத் தொடருங்கள். அதுவே மக்களுக்கு நீங்கள் தரும் மகிழ்ச்சி’’ என அவர் பதிவிட்டுள்ளார்.