தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஐந்தாம் கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கோயமுத்தூருக்கு கமல்ஹாசன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “ஐந்தாம் கட்டமாக நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் பேரெழுச்சியைக் காண்கிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
தேர்தலில் தொழில் துறைக்கான 7 வாக்குறுதிகளை அறிவிக்கிறோம். இதன்படி, புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகள் குறித்த அமைச்சரவை; சிறு, குறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துதல்; குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு; அமைப்பு சாரா தொழிலாளர்கள் முறைப்படுத்துதல்; ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் பார்க் அமைக்கப்படும்; தொழில் தொடங்க அனுமதியை எளிதாக்குதல் என வாக்குறுதி அளிக்கிறேன்.
மக்கள் நீநி மய்யத்திற்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட கிடைக்க மாட்டார் என்று அமைச்சர் கருப்பண்ணன் கருத்தானது  அது அவருடைய பிரார்த்தனை. எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாக உள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடுவதாக வெளியான தகவல், வெறும் தகவல்தான்.  அதை நான் சொல்லவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். கூட்டணி குறித்து இப்போது முடிவு எதுவும் சொல்ல முடியாது.” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.