மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், இரு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் சோதனையின் போது கைப்பற்றினர்.

பிரசாரம்

மணிப்பூரில் மார்ச் 4, 8-ந்தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இம்பாலின் மேற்கு மாவட்டம் லாங்ஜிங் அசோபா பகுதியில் பிரதமர் மோடி இன்று பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

வேலைநிறுத்தம்

ஆனால், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் உள்ள 6 கிளர்ச்சி அமைப்புகள் மாநிலத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் பிரதமர் மோடி வந்து செல்லும் வரை வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு தீவிரம்

இதையடுத்து பிரதமர் மோடி பயணிக்கும் பாதை, பிரசாரம் செய்யும் பகுதி, ஆகியவற்றை பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெடிகுண்டுகள்

இந்நிலையில், பிரசாரம் நடைபெறும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிகோபம் சோய்பம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சோய்பம் சுபாசந்திரா வீடு உள்ளது.

இந்த வீட்டின் அருகே நேற்று சக்திவாய்ந்த ஒரு வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, தவுபால்மாவட்டத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் ஓ சுனில் வீடு அருகேயும் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வெடிகுண்டுகளும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என போலீசார் தெரிவித்துள்ளன.

இந்த இரு வெடிகுண்டுகளும் பிரதமர் மோடியின் பிரசாரம் செய்யும் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

இதையடுத்து, போலீசார் பிரதமர் மோடி வாகனம் வரும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.