போலீசாரும் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் மாநில வருவாய்த்துறை அமைச்சரை ஹனிட்ராப்பில் சிக்கவைக்க தன்னை தீபாலியும் அவரது ஆண் நண்பரும் நிர்பந்தித்து வந்ததாகவும், அதன் காரணமாகவே தான் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் வருவாய்த்துறை அமைச்சர் ராம் லால் ஜாட்டை பாலியல் வழக்கில் சிக்க வைக்க மாடல் அழகி மூலம் ஹனி டிராப் சதிசெய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதன் பின்னணியில் இருந்த உதய்பூரைச் சேர்ந்த அழகு கலை நிபுணர் தீபாலி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் லார்ட்ஸின் 7 மாடியில் இருந்து குதித்து மாடல் அழகி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் தீபாலி மற்றும் அவரது ஆண் நண்பர் அக்ஷத் இவருக்கு சினு, நிக்கின் ஷர்மா, சாகர் என பல பெயர்கள் உண்டு. இவர்கள் அழகு கலை நிபுணர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் பல மாடல் அழகிகளை பயிற்சி கொடுத்து விளம்பரப் படங்களில் நடிக்க வைப்பது, போட்டோ ஷூட் நடத்துவது போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரபலங்களை குறிவைத்து அவர்களுடன் மாடல் அழகிகளை நெருக்கமாக பழக வைத்து பின்னர் அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படம் மற்றும் செல்போன் உரையாடல்கள் போன்றவற்றை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பது அல்லது தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் ஹனிட்ராப் விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அக்ஷத் சிறைக்குச் சென்று விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் மாடல் அழகுக் கலை நிபுணரான தீபாலி, அக்ஷத் இணைந்து ராஜஸ்தான் மாநில வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட்சை ஹனிட்ராப்பில் சிக்க வைக்க திட்டமிட்டனர். அதற்காக ஜோத்பூரை சேர்ந்த மாடல் அழகி குங்குன் உபாத்யாவை பயன்படுத்த முயற்சித்தனர். இந்நிலையில்தான் விளம்பர படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த நிலையில் மாடல் அழகியுடன் தீபாலி, அக்ஷத்துக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகிய தீபாலி பின்னர் அந்த பெண்ணிடம் பேசி தங்கள் திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் அழகி குங்குன் மறுத்தார், ஆனால் அதற்கு கைமாறாக நிறைய பயணம் கொடுப்பதாகவும், பல விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதுடன் அந்தப் பெண்ணை சில விளம்பரப் படங்களிலும் நடிக்க வைத்தனர்.

இதனால் தீபாலியை மாடல் அழகி குங்கன் நம்பினார். இதை வாய்ப்பாக வைத்து குங்கனை குளிக்க வைத்து அதையும் வீடியோவாக தீபாலி படமாக்கினார். பின்னர் அந்தப்பெண்ணை பில்வாராவில் உள்ள மாநில அமைச்சருடன் ஹோட்டலில் தங்கும்படி வற்புறுத்தினார். இந்நிலையில் அமைச்சர் தங்கியிருந்த அறைக்கு பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அந்த மாடல் அழகி குங்கனை அனுப்பி வைத்தனர் தீபாலி, அப்போது அமைச்சரை சந்தித்த அந்த மாடல் அழகி குங்கன் சில ஆவணங்களை அவரிடம் காட்டி தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அமைச்சர் ஆவணங்களைப் படித்துப் பார்த்துவிட்டு இந்த பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறி அந்த பெண்ணை அனுப்பி 
வைத்து விட்டதாக தெரிகிறது. 

ஆனாலும் அந்த மாடல் அழகியை விடாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த தீபாலி அமைச்சர் தங்கியிருந்த சர்க்யூட் ஹவுஸ் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அடுத்தடுத்து அமைச்சரை சந்தித்து எப்படியாவது அவரை ட்ராப்பில் சிக்க வைக்க வேண்டுமென மாடல் அழகியை தீபால் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இல்லையென்றால் அந்தப் பெண்ணின் குளியல் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் தீபாலி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாடல் அழகி குங்கன் உபாத்யா கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்

ஹோட்டல் லார்ட்ஸின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்ததால் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் ரத்தகாயத்துடன் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணுக்கு 30 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இந்நிலையில் ஜோத்பூர் சேர்ந்த 29 பேர் அந்தப் பெண்ணுக்காக ரத்ததானம் கொடுத்தனர். தற்போது அந்தப் பெண் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மாஜிஸ்டிரேட் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். போலீசாரும் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் மாநில வருவாய்த்துறை அமைச்சரை ஹனிட்ராப்பில் சிக்கவைக்க தன்னை தீபாலியும் அவரது ஆண் நண்பரும் நிர்பந்தித்து வந்ததாகவும், அதன் காரணமாகவே தான் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் அழகுக்கலை நிபுணர் திபாலி மாற்றும் அக்ஷத் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தன்னை பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அந்தப் பெண் அணுகினார், அவர் சில ஆவணங்களை காண்பித்தார், ஆனால் தனது துறைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன். உண்மையிலேயே நான் அதிஷ்டசாலி என தெரிவித்துள்ளார். அமைச்சரை ஹனிட்ராப்பில் சிக்கவைக்க சதி செய்யப்பட்டுள்ள விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.