அதிமுகவை உடைக்க ரஜினி என்ற மைப்புள்ளியின் அடிப்படையில் பாஜக சதித்திட்டம் தீட்டியது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி;- ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளதால் பாஜகவின் சதித்திட்டம் தவிடுபொடியானது. பாஜக விரித்த வலையில் விழாமல் ரஜினி தன்னை பாதுகாப்போடு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ரஜினியின் துணிச்சலான முடிவால் தமிழக அரசியலில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் படுதோல்வி அடைந்துவிட்டது. 

அரசியல் சூழ்ச்சிகளை ரஜினி அறிந்த காரணத்தால் அவரது மனசாட்சியின் குரல் ஒலித்திருக்கிறது. அதிமுகவை உடைக்க குருமூர்த்தியின் ஆலோசனையில் அமித்ஷா சதித்திட்டம் தீட்டினார். பாஜகவிற்கு உயிர் கொடுக்க முனைந்த குருமூர்த்தியின் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. ரஜினி என்ற சுவற்றில் சுலபமாக சித்திரம் வரைய முற்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என்று பாஜக தலைவர்கள் சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால் அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. இப்படி அவர்கள் சொல்வதினால் தங்களது சுயமரியாதையை இழந்து நிற்கும் அதிமுக மோசமான சூழ்நிலையை அடையும். அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக எவ்வாறு முடிவு செய்ய முடியும், இதனை அதிமுகவினர் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. எங்களது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி எனவும்  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.