எதிர்வரும் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 72,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத் திட்டம், முறைபடுத்தப்பட்ட மற்றும் எளிமையான ஜி.எஸ்.டி வரி முறை, அரசுத் துறையில் காலியாக இருக்கும் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்படும் என்னும் வாக்குறுதி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் நாட்டை பிளவுபடுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்தார்.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என்பதைப் போல காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் இருக்கின்றன.  மேலும் காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியாது. மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இருக்கின்றன என்று அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.