நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணி அடிப்படையில் இட ஒதுக்கீடுகளை மாவட்ட செயலர்கள் மூலம் முடிவெடுத்துக்கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்திருந்தது. இதனிடையே உள்ளாட்சித்தேர்தலில் முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் திமுகவிற்கு துணை நிற்போம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதவாத, பாசிச சக்திகளையும், இவைகளை ஆதரித்து, கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவா்களையும் எதிா்த்து திமுகவும் அதன் தலைவா் மு.க.ஸ்டாலினும் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து ஆதரவளித்து துணை நிற்கும். திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழக தோ்தல் களங்களில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது.

அந்த வெற்றிகள் தொடா்ந்திட, ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம். ஜனநாயகத்தை வீழ்த்தி சதிச் செயலில் ஈடுபட்டு வரும் மக்கள் விரோத ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, எதிா்த்து முறியடித்து மக்கள் நலனுக்காகத் தொடா்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.