Asianet News TamilAsianet News Tamil

ப்ளூவேலில் சிக்கியுள்ளது காங்கிரஸ்... டிச.18 அன்று கடைசி எபிசோட் விளையாடுமாம்... சொல்பவர் மோடி!

Congress Trapped In Blue Whale Game Final Episode On December 18 said PM Modi
Congress Trapped In Blue Whale Game Final Episode On December 18 said PM Modi
Author
First Published Dec 12, 2017, 4:24 PM IST


காங்கிரஸ் கட்சி இப்போது புளூவேல் சேலஞ்ச் விளையாட்டில் சிக்கியுள்ளது. அது தனது கடைசி எபிசோடை வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி விளையாடுவதைப் பார்க்கப் போகிறோம் என்று பேசினார் பிரதமர் மோடி. குஜராத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் அவர் இவ்வாறு காங்கிரஸை விமர்சித்தார். 

ப்ளூவேல் விளையாட்டு என்பது, தற்கொலைக்குத் தூண்டி, தற்கொலை செய்து கொள்வது வரை இழுத்துச் செல்லும் விளையாட்டு. இணையதளத்தில், ஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகி, பின்னர் அரசால் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டு குறித்து பரவலாகப் பேசப்பட்டது. இந்த விளையாட்டைக் குறித்து மோடி பிரசார மேடையில் பேசியுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்ட சபைத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த டிச.9ம் தேதி முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 14ம் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இப்போது தூள் பறக்கிறது. இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. வடக்கு குஜராத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசினார் மோடி. பிரசாரத்தின் கடைசி இரண்டாவது நாளான நேற்று அவர் பேசியபோது, ப்ளூடூத் என்கிறார்கள், உண்மையில் ப்ளூவேலில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்று நகைச்சுவையாகப் பேசுவது போல் விமர்சித்துள்ளார் மோடி. 
 
காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ராகுல் காந்தி கோல்டன் ஸ்பூனோடு (தங்க கரண்டி) பிறந்தவர். அவர் வறுமையைப் பார்த்தது இல்லை.  ராகுல் காந்தி ஒரு சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். அவர் இந்த மாநிலத்தின் மக்களது புத்திசாலித்தனத்தை மறைத்து விட்டு, முட்டாளாக்கப் பார்க்கிறார். குஜராத் குறித்து பொய்களையும் அரைகுறை உண்மைகளையும் சொல்லி மக்களைக் குழப்பி வருகிறார். 

முதல் சுற்று வாக்குப் பதிவு நடந்த இடங்களில் பாஜக., வென்று விடும் என்பது காங்கிரஸுக்கு தெரிந்ததும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு  நடப்பதாகப் புகர் கூறத் தொடங்கியுள்ளனர்.  காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரம் புளூ டூத் மூலமாக இணைக்கப்பட்டதாக புகார் கூறுகிறார். வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு இயந்திரம் மட்டும்தான். அதில் இணையதளம் என்றெல்லாம் எதுவும்  கிடையாது. இந்த இயந்திரத்தை புளூடூத்தால் இணைக்க முடியாது என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். 
புளூடூத், புளூடூத் என அவர்கள் கத்திக் கொண்டு வருகின்றனர். உண்மையில் அவர்கள்  புளூவேல் விளையாட்டில் சிக்கி கொண்டுள்ளனர். இதன் கடைசி கட்ட ஆட்டம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி விளையாடப்படும் என்று பேசினார் மோடி. 

குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிச.18ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும். அதனைத்தான் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios