தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளனர். ஆந்திரத்தில் இருந்து பிரிந்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா என்ற மாநிலம் உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார்.

 

இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்த நிலையில், முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். தெலங்கானா மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. தற்போது சந்திரசேகர் ராவ் காபந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். 

இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள நிலைமை குறித்து அறிய தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது.

 

இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வலுவுடன் எதிர்கொள்ள சந்திரபாபு நாயுடு புதிய திட்டம் வகுத்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் என புதிய கூட்டணி அமைய உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இந்த இரு கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்து வந்தனர். சுமார் 36 ஆண்டு கால பகைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.