காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முடிந்து 50 நாட்கள் கடந்தபின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, எத்தனை லட்சம் கோடி கருப்புபணம், கள்ளநோட்டுகளை பிடிபட்டது குறித்தும், நாட்டில் இருந்து அழிக்கப்பட்டது குறித்தும் தனது உரையில் குறிப்பிடவில்லை. கோடிக்கணக்கான மக்கள் இந்த தடை அறிவிப்பால் பல வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர்.

இவர்களுக்காக மோடி எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்கவில்லை, தனது உணர்ச்சிகளையும் காட்டவில்லை. நாட்டில் இருந்த ஊழல், கருப்புபணத்தை சுத்தப்படுத்துகிறேன் என்றுகூறிவிட்டு 125 அப்பாவி மக்களின் உயிரை பலிகொடுத்துவிட்டார். இறந்தவர்கள் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.

பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்து மோடியின் பேச்சை ஆவலுடன் கேட்டநிலையில், அதில் எதுவும் குறிப்பிடவில்லை. மக்களை தொடர்ந்து பொருளாதார அராஜகத்தில் சிக்க வைத்துள்ளார்.

இந்த 50 நாட்களில் எத்தனை லட்சம் கோடி கருப்புபணத்தை நாட்டில் இருந்து அழித்தீர்கள் என்பதை மக்கள் ெதரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? அதைப்பற்றி ஏன் மோடி பேச மறுக்கிறார்? பல கேள்விகளுக்கு மோடியிடம் இருந்து பதில் கிடைக்காமல் இருக்கிறது. மோடியின் முடிவு பொருளாதாரத்தை முடக்கி, நாட்டை செயல்படவிடாமல் செய்துவிட்டது.மீண்டும் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு எப்படி கொண்டு வரப்போகிறீர்கள். இந்த 50 நாட்களில் மோடியின் 50 நண்பர்கள்தான் பயன் அடைந்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.