நடிகர் அக்‌ஷய் குமாருடனான பிரதமரின் மனம் திறந்த பேட்டியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமர்  நரேந்திர மோடி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அண்மையில் அளித்திருந்தார். இந்தப் பேட்டி பாஜகவினர் மத்தியில் வரவேற்பையும், எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பையும் பெற்றது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நடிகருடனான பிரதமரின் பேட்டியை வைத்து மோடியை விமர்சனம் செய்துவருகிறது.
இந்தப் பேட்டி வெளியான சில மணி நேரத்தில், அதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.  அதில், “அனைவருக்குமே யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதைக் காவலாளி உணர வேண்டும்” என மோடியை மறைமுகமாக சாடியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும் பிரதமரின் மனம் திறந்த பேட்டியை விமர்சித்திருந்தார். “ திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை பிரதமர் நாடுவதுபோல தெரிகிறது. அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர். நம் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். ஆனால், தோற்றுப்போன அரசியல்வாதியோ அக்‌ஷய் குமாரைவிட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வப்போது ட்விட்டர் மூலம் பதில் அளித்துவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரமும் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார். “பாகிஸ்தானுக்கு என்ன செய்தார் எனப் பேசும் தற்பெருமையைக் கேட்டுகேட்டு நான் சோர்வடைந்துவிட்டேன். தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு முன்பாக மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவாரா? 
தனது கட்சியின் மூத்த தலைவர்கள் பேசிய வெறுப்பான பேச்சுக்கள் பற்றி பிரதமர் பேசுவதை கேட்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சிறு, குறு விவசாயிகளின் அவலநிலை குறித்தும் பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று அடுத்தடுத்த ட்வீட்டரில் பதிலளித்து கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.