Congress said dont talk about sushma swaraj

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை இறுதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன.

பா.ஜ,க.சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் களம் காண்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமரை வீடியோ போட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமர்சித்திருந்தார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகராக இருந்த மீராகுமார் நடத்தும் விதத்தைப் பாருங்கள் என்று பின்குறிப்பிட்டு அந்த வீடியோவுக்கான லிங்கையும் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா வெளியிட்டிருந்தார்.

சுஷ்மா சுவராஜின் இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. இது குறித்துப் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் டாம் வடக்கன், “சபாநாயகராக இருந்த மீராகுமார் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்பதே சுஷ்மா சுவராஜின் குற்றச்சாட்டு.

குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்களவையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே சபாநாயகரின் பணி. அதனையே மீராகுமார் செய்துள்ளார். இது ஒரு பெரிய பிரச்சனையாக நான் கருதவில்லை.”

“சுஷ்மா ஸ்வராஜின் இக்குற்றச்சாட்டு எங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. மீராகுமார் எப்படிப்பட்டவர் அவரது குடும்பப் பின்னணி என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நம்பகத்தன்மை உள்ளவர்கள் மீது யாரும் தேவையில்லாமல் பழி சுமத்தக் கூடாது. வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து சுஷ்மா ஸ்வராஜ் பேச வேண்டும்” இவ்வாறு டாம் வடக்கன் கூறினார்.