கடந்த 70 ஆண்டுகளில் பல்வேறு ஊழல்கள் மற்றும் மோசடிகள் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

காங்கிரஸ் ஆட்சியின் போது, போபர்ஸ் ஊழல், 2ஜி அலை கற்றை ஊழல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல், ஸ்கார்பென் நீர் மூழ்கி கப்பல் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மகாராஷ்டிரா விவசாய ஊழல் இப்படியே காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் நீள்கிறது.

இவற்றில் சில ஊழல்கள் பல லட்சம் கோடியில் நடந்துள்ளன. இந்த ஊழல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 1948 – ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சிகளில் நடந்துள்ள ஊழல்கள் ஏறத்தாள ரூ.4.82 லட்சம் கோடிக்கு மேல். இதனால் 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி 180 நாடுகளைக் கொண்ட மலிந்த ஊழல் நாடுகளின் பட்டியலில் 94-வது இடத்திற்கு சென்றது இந்தியா.

1948-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது நடந்த ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் நடந்த ஊழல்தான் சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழலாக இருந்தது. அதன்பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் மிகப்பெரிய ஊழலாக அமைந்தது. அதனைத் தொடர்து காங்கிரஸ் கட்சியும் ஊழலும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஊழலில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் மிக நீண்டது. ஐ.என்.எக்ஸ் பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தற்போது சிறையில் உள்ளார். இவர் மீது மேலும் பல மோசடி வழக்குகள் உள்ளன. ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்  ஏற்கனவே கைதானார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல 2ஜி வழக்கு மேல் முறையீட்டில் அதிகமான ஆவணங்களை சி.பி.ஐ சேகரித்து உள்ளது. இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இனி தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவரும் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரசிங் அவரது மனைவி பிரதிபா உள்ளிட்டோர் மீது 2015 ஆண்டு, செப்டம்பர் மாதம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தம் தொடர்பாக, அரியானாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். விவிஐபிக்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் பெயர் இடம்பெற்றுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைரும், மத்திய பிரதேச மாநில முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி. இவர் மீதும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு உள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 20-ஆம் தேதி 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.