காங்கிரஸூக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிய ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், தான் பாஜகவில் இணையப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

சச்சின் பைலட் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியல் முகாமிட்டுள்ளனர்.

 

42 வயதான சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். சச்சின் தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் நினைத்தால், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை தன்னால் கவிழ்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், சச்சினின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 109 எம்எல்ஏக்களின் பலம் உள்ளதாக தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு 101 எம்எல்ஏக்கள் பலம் தேவை. அதன்படி, சச்சின் பைலட்டுடன் 16 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பாஜக பொறுத்திருந்து கண்காணித்து வருவதகாவும், அதன் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையிலான பெரும்பான்மையை நிரூபிக்கும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே, கெலாட் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், சட்டமன்றத்தில் தனக்கும், சச்சின் பைலட்டிற்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

 

சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விலகல் காரணமாக மத்திய பிரதேசம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.