காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதும் கூட்டணி அமைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் இப்போதே பல்வேறு வியூகங்கள் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தேசிய அளவில் மம்தா பானர்ஜி ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே திமுக காங்கிரசுடன் கூட்டணி வைக்குமா? இல்லை காங்கிரஸை கழட்டிவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெங்களூருவில் சசிகலாவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால் அந்த  கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்க தயார் என தினகரன் கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.