மே 17-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மூன்றாம் கட்டமாக மே 4 முதல் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், நாடு முழுவதும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், முன்பைவிட தொற்று தாக்குதல் அதிகரிக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் மக்களின் வருவாய் இழப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் காணொலி காட்சி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மே 17-ம் தேதிக்கு பிறகு என்ன நடக்கப்போகிறது? ஒரு வேளை ஊரடங்கை மத்திய நீட்டிக்க நினைத்தால் அதற்கான அளவீடுகள் என்ன ?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதே கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், “மே 17-ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று பேசினார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால், மாநிலங்களும் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. அதே வேளையில் மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்ட நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்கவும் இல்லை. இந்த விஷயங்களை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பேசி மத்திய அரசு மீது குற்றம் சாட்டினர்.