திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறுமனே தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல. இது ஒரு கொள்கை கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தரவில்லை என்று திமுக மீது காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. அதிருப்தியை வெளிப்படுத்தும் வண்ணம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் திமுகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அதில், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. மொத்தம் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ துணைத் தலைவர் பதவியோ வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது” என்று அறிக்கையில் சாடியிருந்தனர்.


இந்த அறிக்கையினால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், “வெளிப்படையாக இப்படி அறிக்கை வெளியிடுவது நல்லதல்ல” என்று தெரிவித்திருந்தார். 
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், “இது ஆதங்கம்தானே தவிர, கூட்டணிக்கு மிரட்டல். வரும் சட்டப்பேர்வைத் தேர்தலிலும் திமுகவோடு கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக - கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “ எங்களின் வருத்தம் அறிக்கையோடு முடிந்துவிட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறுமனே தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல. இது ஒரு கொள்கை கூட்டணி. இந்திய அளவில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான கூட்டணி” என்று விளக்கியுள்ளார்.