ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் சச்சின் பைலட் தனக்கு 16-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் அரசுக்கு கூட்டணி கட்சிகள், சுயேட்சைகள் என 17 பேர் ஆதரவு அளித்துவருகிறார்கள். இவர்களையும் சேர்த்து காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் சச்சின் பைலட் முகாமிட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே இன்றும் 2-வது நாளாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட், அவருடைய இரு ஆதரவு அமைச்சர்கள் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து சச்சின் பைலட்டை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்திவருகின்றனர்.