பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. சட்டப்பேரவையில் தனி பெரும் கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்தது. 
பீகாரில் பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜகவிலிருந்து வெளியேறி ஆர்ஜேடியின் தேஜஸ்வி ஆட்சியமைக்க நிதிஷ் குமார் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த  தலைவர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 “பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சோஷலிச கொள்கையைப் பின்பற்றி வருகிறார். அவர் பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவு தரக் கூடாது.  நிதிஷ் குமார் மிகப்பெரிய தலைவர். இனிமேலும் அவர் மாநில அரசியலில் கவனம் செலுத்தாமல் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வேண்டும். பீகாரில் தேஜஸ்வி யாதவ் முதல்வராகப் பதவியேற்க நிதிஷ்குமார் ஆதரவு அளிக்க வேண்டும்” என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.