நாடு முழுவதும் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல்  சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த  தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்குமென அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார் .  மத்திய அரசு இடம்பெயர்ந்த இந்தியர்களை மீட்பதில் பாகுபாடு காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்,  வெளிநாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை  மீட்பதில் காட்டிய  ஆர்வம் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதில் காட்டவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  மனித சமூகம் இதுவரை சந்தித்திராத பெரும் சோகத்தை சந்தித்து வருகிறது,   எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மத்திய அரசு ஊரடங்கு அறிவித்ததால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். 

1947 ஆம் ஆண்டில் பிரிவினைக்குப் பின்னர் சுமார் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்நடையாகவே நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .  இந்தியாவில் இது மிகப்பெரிய மனித சோகம் ஆகும்,  உணவு இல்லாமல் மருந்துகள் இல்லாமல் பணமில்லாமல் போக்குவரத்து இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையை தவிர அவர்களிடம் வேறு எதுவுமே இல்லை .  எனவே வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது ,  ஆனால் அதை மத்திய அரசு கொஞ்சமும் கவனத்தில் கொள்ளவில்லை .  வெளிநாடுகளில்  சிக்கித் தவித்த இந்திய குடிமக்களுக்கு இலவச விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களை  நாட்டிற்கு அழைத்து வந்த மத்திய அரசாங்கம்  அதில் பாதி அளவுக்கு கூட நாட்டிற்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதில்  காட்டவில்லை. 

எதுயெதற்கோ 100 கோடி  150 கோடி என பணத்தை விரயம் செய்யும் மத்திய அரசு , புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு வருவதிற்கு செலவு செய்ய மறுக்கிறது , லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுகளில் சிக்கித்தவித்து வருவதுடன் தங்களது உறவினர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறார்கள் , ஆனால் அவர்களுக்கு இயக்கப்படும்  ரயிலுக்கு டிக்கெட் கட்டணம்  வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது , எனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில்  பயணத்திற்கான செலவை இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்  என சோனியா காந்தி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  எனவே  ஒவ்வொரு மாகாண காங்கிரஸ் கமிட்டியினரும்  மாநிலத்திலுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்கு உதவ வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.