பீகாரில் அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7 வரை மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஒரு கூட்டணியாகவும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரீய லோக் சமதா, மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் எனப் பல கட்சிகள் இருந்தன. இதில் தொகுதி பங்கீட்டில் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்காததால் ராஷ்டிரிய லோக் சமதா, மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் கூட்டணிலியிருந்து விலகின.


காங்கிரஸ், இடதுசாரிகளுடன் ராஷ்ட்ரிய ஜனதாதளம் சீட்டு பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் இழுபறி நீடித்தது. ஒரு கட்டத்தில் பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோஹில், “சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்க தயாராக உள்ளது” அதிரடியாக அறிவித்தது.


இதனையடுத்து காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க ராஷ்டிரிய ஜனதாதளம் முன்வந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதாதளம் ஒதுக்கீடு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளைவிட அதிகம். இடதுசாரிகள் உள்பட சிறிய கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய ராஷ்டிரிய ஜனதாதளம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.