‛‛2019 ம் ஆண்டில் இல்லை, 2090 ம் ஆண்டு ஆனாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

டெல்லியில், நேற்று நடந்த காங்கிரஸ், தேசிய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், ‛2019 ம் ஆண்டு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வரும். அப்போது தான் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்' என கூறினார்.

ராகுலின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் வெங்ககையா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“ராகுல் பகல் கனவு காண்கிறார். 2019ம் ஆண்டு நல்ல காலம் பிறக்கும் என்ற ராகுலின் கருத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காங்கிரசுக்கு இனி ஏது நல்ல காலம்? ஊழல், முறைகேடுகள், கொள்கை முடக்கம், செயல்பாடற்ற தன்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல விஷயங்களால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இதெல்லாம் நல்ல காலமா? 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது. அது முடியாது. 2019 அல்ல 2090ம் ஆண்டு ஆனால் கூட காங்கிரஸ் கட்சி இனி ஆட்சிக்கு வர முடியாது” என்றார்.