திமுக சாதி, மதம் சார்ந்தது என கூறினால் அதையெல்லாம் நம்ப முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கைது; தயாநிதி மாறன், டி.ஆர்.பாலுவின் முன்ஜாமீன்; திமுக எம்.எல்.ஏ.வின் அம்பட்டையன் என்ற பேச்சு போன்றவற்றை வைத்து சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் திமுகவை அதிமுகவினரும் பாஜகவினரும் திமுக ஜாதி வெறி பிடித்த கட்சி; சமூக நீதிக்கு எதிரான கட்சி என்று விமர்சித்துவருகிறார்கள். ஜாதிய ரீதியாக திமுகவையும் திமுக கூட்டணியையும் சிதறடிக்கும் வேலையை அதிமுக -பாஜக செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பாக குற்றம் சாட்டியிருந்தார்.


இந்நிலையில் திமுகவை சாதிய ரீதியாக விமர்சனம் செய்வதற்கு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சாதியைப் பற்றி திமுக எப்போதும் எங்குமே பேசியதில்லை. அவர்கள் வீட்டில்கூட இனம், ஜாதிக்கு அப்பாற்பட்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. திமுக ஜாதி, மதம் சார்ந்தது என கூறினால் அதையெல்லாம் நம்ப முடியாது. திமுக ஆட்சியில் இருந்தபோது அளித்த வளர்ச்சியை மறந்துவிட்டு, வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக எனும் மூழ்கும் கப்பலில் வி.பி துரைசாமி ஏறியிருக்கிறார். அதனால் அவருக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை”என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.