நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரசுக்கு வாக்களிக்க வந்த மக்களை வாக்குச்சாவடிகளில் நின்றபடி அமைச்சர்கள் நிர்ப்பந்தம் கொடுத்து அதிமுகவுக்கு வாக்களிக்க வைத்தனர் என குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்பி வசந்த குமார்.  மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளார். 

அவரின் பேச்சு  மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வசந்தகுமார் எம்பி தூத்துக்குடிக்கு வருகை தந்திருந்தார்.  இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு  3- மயில்  என்ற இடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களிக்க நினைத்து வாக்குச்சாவடிகளுக்கு  வந்தனர். 

ஆனால் அங்கு  அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும் வாக்குச்சாவடி மையங்களில் நின்றிருந்த  அதிமுக அமைச்சர்கள், வாக்களிக்க வந்தவர்களிடம் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென கூறி நிர்பந்தம்  கொடுத்ததின் காரணமாகவும்  அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என அதிரடியாக தெரிவித்துள்ளார். அனாலும் மீண்டும் நாங்குநேரி சட்டமன்ற  தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.