உலகம் முழுவதும் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 649 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமாக மஹாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு 26 பேர் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிகள் பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

அதன்படி தமிழக காங்கிரஸ் சார்பாகவும் நிதி உதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 1 கோடி வழங்குது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் வழங்கப்பட இருக்கிற நிதியை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக உடனடியாக வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல தமிழக சட்டமன்றத்தில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையினை வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.