சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,132 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை குறி வைத்து சிவகங்கை மட்டுமல்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பழனி, மதுரை, என பல இடங்களுக்கும் சென்று கொரோனா நிவாரண உதவிகளை கார்த்தி சிதம்பரம் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நாகை எம்.பி. செல்வராஜ் மற்றும் 20க்கும் மேற்பட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.