சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் ஒரு கட்சி மூன்றாம் அணி அமைப்பது என்பது அந்தக் கட்சியின் விருப்பம். அதில் நாம் தலையிடக் கூடாது. அது அக்கட்சியின் சொந்த விருப்பம். தமிழகத்தில் உள்ள ஆளுநர் விசித்திரமானவர். எதில் தலையிட கூடாதோ அதிலெல்லாம் தலையிடுவார். எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ அதற்கெல்லாம் ஒப்புதல் வழங்கமாட்டார். இது வேதனையாக உள்ளது.


கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். மனுதர்ம நூலை பாஜகவினர் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தைவிட மனுதர்மம் உயர்ந்ததா என்பதை பாஜகத்தான் தெளிவுபடுத்த வேண்டும். இதுதான் முக்கியமான விஷயம். பாஜகவினர் இந்த நூலை பற்றி விளக்க வேண்டும். மனுதர்மம் என்ன கூறுகிறது என்பதை விளக்கிக் கூற வேண்டும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.