நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜகவில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணையப்போவதாக தகவல் பரப்பப்பட்டது. இந்நிலையில் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ் பரம்பரையிலிருந்து வந்தவள் நான். நான் பாஜகவுக்கு செல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நான் நெருப்பு போன்றவர். என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதுதொடர்பாக பத்திரிகைகள் மீது வழக்கு தொடர உள்ளேன். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வதந்தி பரப்புவர்களை  நான் சும்மா விடப்போவதில்லை.
காங்கிரஸ் கட்சியில் மட்டுமே ஆணாதிக்க சிந்தனை உள்ளதைப் போல குஷ்பு பேசியிருக்கிறார். எல்லா கட்சிகளிலும் அந்த சிந்தனை உள்ளது. குஷ்பு சேர்ந்துள்ள பாஜகவில்தான் ஆணாதிக்கம் அதிகம். குஷ்பு பாஜகவுக்கு சென்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் அங்கு சென்றதால் எந்த அரசியல்  மாற்றமும் நிகழப்போவதில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சித் தலைமை வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில் நான் போட்டியிடுவேன்.” என்று விஜயதாரணி தெரிவித்தார்.