நாங்குநேரி தொகுதியை எந்த இழுப்பும் இல்லாமல், மிக கூலாக காங்கிரஸுக்கு ஸ்டாலின் ஒதுக்கியதுமே ’நம்மை இங்கே நிறுத்தி தோற்கடிக்க நினைக்கிறது தி.மு.க. அப்படி நடந்தால்தான் எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் கொடுக்கும் ஸீட்களை வாயை மூடிக்கொண்டு நாம் வாங்குவோமென்று கணக்கு.’ என்று காங்கிரஸினுள்ளிருந்து சிலர் குமுறினர். ஆனால் சீனியர் தலைவர்கள் இதை கண்டு கொள்ளவில்லை. 

ஆனால், சூழல் போகும் போக்கைப் பார்த்தால், தி.மு.க.வின் கணக்கு அதுதானோ? என்று யோசிக்க வைக்கிறது. அதாவது நாங்கு நேரி தொகுதியில் வாழும் தேவேந்திர குல வேளாளர் மக்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து, கறுப்புக் கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு! எனும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., காங்கிரஸ் என இரண்டு தரப்பு வேட்பாளர்களும், வி.ஐ.பி.க்களுமே உள்ளே நுழைய முடியாமல் நிற்கின்றனர். 

இந்த மக்களின் பிரச்னையை எப்படி சரி செய்வது? என்று காங்கிரஸ் கைபிசைந்து நிற்கிறது. ஆனால் அ.தி.மு.க.வோ ‘மக்களின் கோபம் நமக்கே சாதகமான ரிசல்டை தரும்’ என்று குதூகழித்து இருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. வைக்கும் கூடுதல் சில செக்-களும் காங்கிரஸை கதற வைத்துள்ளது. அதாவது அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மளமளவென வலைவிரித்து காங்கிரஸ் மற்றும் அ.ம.மு.க. தரப்பிலிருந்து ஆட்களை தங்கள் கட்சிக்கு இழுக்கின்றனர். அந்த வகையில் நாங்குநேரி யூனியனின் மாஜி சேர்மன் லக்கான் என்பவர், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து காங்கிரஸுக்கு செம்ம ஷாக் கொடுத்துவிட்டார். 

அதேபோல ஓ.பி.எஸ். விரித்த வலையில், நாங்குநேரி ஒன்றிய மாநில அ.ம.மு.க. செயலாளர் அஜித்குமார், அக்கட்சியின் ஜெ., பேரவைச் செயலாளர் போலீஸ் ஆறுமுகம் உள்ளிட்ட இருபது நிர்வாகிகளும் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். இன்னும் பலரை உள்ளே இழுப்பதற்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. இந்த அதிரடிகளால் நொந்து கிடக்கும் காங்கிரஸ், தி.மு.க.வின் உதவியை நாடிக் காத்துக் கிடக்கிறது.

ஒருவேளை தி.மு.க. இங்கே நேரடியாக களமிறங்கியிருந்தால், இந்த தொகுதியிலிருக்கும் அக்கட்சி நிர்வாகிகள் எப்படி உழைத்து, அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தருவார்கள்! அதை இப்போது செய்து நமக்கு கைகொடுக்கலாமே? என்று புலம்புகிறார்கள். ஆனால் தி.மு.க.வோ இங்கு நடக்கும் கூத்துக்களை கண்டும் காணாமலும் கள்ளச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறது. அப்ப இவியங்க திட்டமே அதுதானோ?