தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்கள் பயனடைந்து வருவதாகவும், இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி கேட்டுக்கொண்டுள்ளார்.
2000 குளங்களை காணவில்லை
தமிழக சட்ட பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. நீர்வள துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய என மொத்தம் 4,500 குளங்களை இருந்ததாகவும் ஆனால் தற்போது 2500 குளங்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார் எனவே மீதமுள்ள குளத்தை மீட்க வேண்டும் எனவும் இவ்வாறு செய்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் மக்கள் விவசாயம் செழிக்கும் என தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் நிறுத்த வேண்டாம்
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஜல்லி மண் போன்றவை லாரிகள் மூலம் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், இதன் காரணமாக ஜல்லி மற்றும் மணல் விலை அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் இலவச வீடு திட்டத்திற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதனைக் கொண்டு வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஜயதாரணி தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் இளம் பெண்கள் உயர்கல்விக்கு ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் வரவேற்க கூடியது என தெரிவித்தவர், உதவி தொகை வழங்கி வரும் நிலையில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை திட்டத்தை கைவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். திருமண உதவி திட்டத்தை தொடரும் பட்சத்தில் திமுக அரசிற்கு நற்பெயர் கிடைக்கும் என தெரிவித்தார்.

விஜயதாரணிக்கு மலர் கொத்து
இவ்வாறு விஜயதாரணி பேசிக்கொண்டு இருக்கும்போதே பேரவையில் கொடுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்ததை அடுத்து அவருக்கான மைக் ஆப் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக்கொண்டனர். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் விஜயதாரணிக்கு பேச வாய்ப்பு வழங்குமாறு சட்டப்பேரவை துணை தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற துணை சபாநாயகரும் விஜயதாரணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கினார். இந்தநிலையில் அதிமுக அரசின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை ஆதரித்து பேசிய விஜயதாரணிக்கு, பாப்பாரப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தன் அருகில் இருந்த அனைத்து ரோஜா பூக்களையும் பெற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியிடம் வழங்கினார். இந்த சம்பவம் சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
