உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ராவில் பிரியங்கா காந்தி நடத்திய போராட்டத்துக்கு பிறகு, தலைவர் பதவிக்கு பிரியங்கா வர வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழத் தொடங்கியிருக்கிறது.  
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். ராகுல் தலைவர் பதவியில் தொடர வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் அவரை வற்புறுத்தினார்கள். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ராகுல், பதவியிலிருந்து விலகிவிட்டார். இதுவரை காங்கிரஸில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனைகள் காங்கிரஸில் தொடர்ந்து நடந்து வருகிறது.


இந்நிலையில், பிரியங்கா காந்தியை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸில் துளிர்விட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உ.பி.யில் சோன்பத்ரா போராட்டத்துக்குப் பிறகு பிரியங்கா மீது காங்கிரஸாரின் பார்வை திரும்பியிருக்கிறது. சோன்பத்ரா போராட்டத்தை பிரியங்கா கையாண்ட விதத்தை மூத்த தலைவர் நட்வர் சிங் வெகுவாகப் பாராட்டியிருந்தார் " சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்களே. அது மிகவும் அற்புதமானது. பிரியங்கா அந்தக் கிராமத்திலேயே தங்கி  நினைத்ததை சாதித்துவிட்டார். தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்காதான் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.” என்று கொளுத்திப்போட்டார்.
இதன்பிறகு பிரியங்கா காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியிருக்கிறது. காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று ராகுல் அறிவித்தவிட்டபோதும், பிரியங்கா தலைவர் பதவிக்கு வந்தால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவுடன் பேசியிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரியங்கா காந்தியை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸில் வலுப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க பிரியங்கா முன்வருவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.