மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கொரோனா, புலம்பெயர்ந்தோர் விவகாரம், சீன விவகாரம், பொருளாதாரம் பிரச்னை என எல்லா விவகாரங்களில் மோடியையும் மத்திய அரசையும் மிகக் கடுமையாக ராகுல் காந்தி விமர்சிக்கிறார். நாள்தோறும் பல கேள்விகளை மத்திய அரசிடம் ராகுல் கேட்டவண்ணம் உள்ளார். இதேபோல பல பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறார். இதுபோன்ற ராகுலின் கேள்விகளுக்கு அடுத்த கட்ட தலைவர்கள் பதிலடி தருகிறார்கள்.


குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்திலேயே கொரோனா விவகாரம் பற்றி ராகுல் காந்தி ஒரு முறை எச்சரிக்கைகளை விடுத்தார். ஆனால், அப்போது மத்திய அரசு காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மார்ச் 15-க்கு பிறகுதான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது. தற்போது கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் ராகுல் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், “நான் விடுக்கும் எச்சரிக்கைகளை மத்திய அரசு கேட்கவில்லை” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்   ட்விட்டரில் ராகுல் பதிவிட்ட பதிவில், “கொரோனா பரவல் குறித்தும் இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்தேன். ஆனால் மத்திய அரசு அதையெல்லாம் கேட்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டது. தற்போது சீன எல்லை பிரச்னை குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால், அதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்.” என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.