மத்திய பட்ஜெட்டில் உள்ள 30 லட்சம் கோடியில் ரூ. 65,000 கோடியை ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த மாதம் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நாளையுடன் காலாவதியாக உள்ளது. இந்நிலையில்  தமிழகம், கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளாம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளன. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்திய நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவை அறிவிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்தது.


இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம்  தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கடினமான சூழ்நிலையில் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்திவரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏழை, எளிய மக்களுக்கு உதவ 65 ஆயிரம் கோடி போதும் என்று  ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன். ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி.
பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இந்த ரூ. 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பதுதான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.