Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செய்யாவிட்டால் பழியை சுமக்க வேண்டிவரும்... எடப்பாடி அரசை கடுமையாக எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி..!

மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்ட பழியை அதிமுக அரசு சுமக்கவேண்டி வரும் தமிழக அரசை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார். 
 

Congress leader K.S.Alagiri warns Edappadi Palanisamy government
Author
Chennai, First Published Oct 21, 2020, 9:01 PM IST

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த பாஜககூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது ஐந்து மணிநேர விவாதத்திற்குப் பிறகு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மின்சார சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் திருத்தங்களிலிருந்து பாதுகாக்கிற வகையிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.Congress leader K.S.Alagiri warns Edappadi Palanisamy government
பஞ்சாப் சட்டப்பேரவையில் மசோதாக்களைத் தாக்கல் செய்து முதல்வர் அமரீந்தர் சிங் பேசும்போது, 'விவசாயிகளுக்கு ஆதரவாக மசோதாக்கள் நிறைவேற்றியதால் ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் காங்கிரஸ் அரசு ஒருபோதும் அனுமதிக்காது' என்று குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனைக் காக்க மசோதாக்களை துணிவுடன் நிறைவேற்றிய காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கை தமிழக காங்கிரஸ் சார்பாகப் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் 'கோதுமை, நெல் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழ் கொள்முதல் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், வேளாண் விளை பொருள்களைப் பதுக்குபவருக்கு தண்டனை விதிக்கவும்' வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதுகாக்கப்பட்டுள்ளது.Congress leader K.S.Alagiri warns Edappadi Palanisamy government
அரசமைப்பு சட்டத்தில் மாநில அரசின் பட்டியலிலுள்ள விவசாயம் குறித்தும், விவசாய விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கிற வகையிலும் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி சட்டம் இயற்றியது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் யோசித்துவருவதாக முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதைப் போலவே ராஜஸ்தான் அரசும் விவசாயிகள் நலனை பாதுகாக்கத் தனி சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற வகையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டிருக்கிறது.
எனவே, மத்திய வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளையும், விவசாயிகள் பெற்றுவந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களைப் போல தமிழக அரசும் உடனடியாக சிறப்புச் சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் மத்திய வேளாண் சட்டங்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததற்குப் பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Congress leader K.S.Alagiri warns Edappadi Palanisamy government
தமிழக முதல்வர் இக்கோரிக்கையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைகளைக் காப்பாற்றுகிற வகையில் சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி புதிய விவசாய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதை செய்யவில்லை என்றால் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்ட பழியை அதிமுக அரசு சுமக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios