தமிழகத்தில் கடந்த 44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்கள், காவலர்களின் தியாகம் வீணாகிவிட்டதா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் 7ம் தேதி முதல்  டாஸ்மாக் மதுபானக் கடைகள்  திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மதுக்கடைகளைத் திறக்க எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆனால், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்தன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் தனது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் ட்விட்டர் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதில், “கேரளாவில் புதிய தொற்றுகளே இல்லை. அங்கு மதுக்கடைகளை அரசு திறக்கவில்லை. தமிழகத்தில் தினமும் தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், இங்கு மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. 44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்கள், காவலர்களின் தியாகம் வீண் தானா?” என்று கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.