விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் திருவெண்ணய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரையில் அதிமுகவைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் கலியபெருமாள்‌, முருகன் ஆகியோர் முன்பகையில் அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரியின் மகள் ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. மேலும்  ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் திமுக, தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளும் நிதி உதவியை வழங்கின.  
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஜெஸ்ரீ எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். “மாணவி ஜெயஸ்ரீயை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் உயிரோடு தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. ஈவு, இரக்கமற்ற முறையில் சிறுமியை படுகொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கவேண்டும். மகளை இழந்து தவிக்கும் ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’ என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.