தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து கண்ணூர் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகத்துக்கு வரும் அமித்ஷா வருகை எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை உண்டாக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சொல்லியிருக்கிறார். அமித்ஷா வரும்போதே கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் வருவாரா, நாங்கள் அவரை பார்த்து பயப்பட? ஜனநாயக நாட்டில் யாரைப் பார்த்தும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதிலும் தமிழ் மண்ணில் அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தமிழகத்தில் அமித்ஷாவை கண்டு யாரும் பயப்பட மாட்டார்கள். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கற்பனையில் வாழ்கிறார். அவர் கற்பனை உலகை விட்டுவிட்டு நிஜ உலகத்துக்கு வர வேண்டும்.


பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணிக்கும் தோல்வியடைந்த கூட்டணிக்கும் வாக்குவித்தியாசம் வெறும் 12,700தான். இதுவரை இந்தியாவில் இதுபோன்று நடந்ததுகூட இல்லை. அந்தவகையில்  பீகார் தேர்தல் முடிவு எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றிதான். கூட்டணியில் எந்தக் கட்சிக்கு சீட்டு அதிகம், எந்தக் கட்சிக்கு சீட்டு குறைவு என்றெல்லாம் பார்ப்பதில்லை. கூட்டணி எவ்வளவு வென்றது என்றுதான் பார்ப்பார்கள். பீகாரில் அமைச்சர்கள், செல்வாக்கு மிகுந்த பெருமளவு பணம் செலவு செய்யும் வேட்பாளர்கள் உள்ள தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை. எனவே பீகாரை வைத்து கணக்குபோடக் கூடாது.


தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 10-க்கு 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் பாட்டி காலத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் எப்படி? எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. மோடியை வெல்ல முடியாது என்று நினைத்தவர்களுக்கு பீகார் தேர்தல் ஒரு பாடம். மோடியை வீழ்த்த முடியும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.