கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். கடந்த ஓராண்டாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்கும் நிலையில், அப்பதவியிலிருந்து அவர் விலக விரும்புவதாகக் கூறப்படுகிறது. அப்பதவியை மீண்டும் ஏற்குமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தியும், அவரும் அப்பதவிக்கு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரம் செயல்படக்கூடிய துடிப்பான அனைவரும் அறிந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். 
இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியைச் சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு தேர்வு செய்வது பற்றி விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கட்சித் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, ராகுலை பின்பற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.