பா.ஜ.க. மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் அச்செய்தியைத் தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்தபடி உயிரிழந்தார். போபாலில் வாக்கு எண்ணும் மய்யம் ஒன்றில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுல் ஒருவராக இருப்பவர் ரத்தன் சிங் தாகூர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் ஆட்சி நடந்துவந்த மத்தியபிரதேசம் மாநிலம் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின் மூலமாக காங்கிரஸ் வசம் வந்தது.

இதே மனநிலை பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு 29 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28ல் பாஜக முன்னிலை வகித்தது. இச்செய்தி போபாலின் வாக்கு எண்ணும் மய்யம் ஒன்றிலிருந்த ரத்தன் சிங் தாகூருக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரால் கொண்டு செல்லப்பட்டவுடன் தாகூர் அப்படியே தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார்.

உடனடியாக டாக்டர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கும் அவரைக் கொண்டு செல்ல அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு வந்த சில நொடிகளிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.